செங்கல்பட்டு அடுத்த திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலையில் சிறுத்தைபுலியை பார்த்ததாக மாணவிகள் கூறியதால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் பெண்கள் மேல்நிலைபள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக் குன்றம் நகரப்பகுதியில் உள்ள வேதகிரீஸ்வரர் மலையை ஒட்டி உள்ள கிரிவலப்பாதையில், நேற்று முன்தினம் இரவு சிறுத்தைபுலி நடந்து சென்றதை பார்த்ததாக, அதேபகுதியில் வசிக்கும் கண்ணன் என்ற ஆசிரியர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் காரணமாக, வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். உடனே செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சிறுத்தைபுலி நடமாட்டம் உள்ளதா என ஆய்வு செய்தனர். ஆனால், சிறுத்தைபுலி நடமாட்டதிற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், மலையை ஒட்டியுள்ள திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையி லிருந்து பார்த்தபோது, பள்ளியின் சுற்றுச் சுவரை ஒட்டியுள்ள மலைப்பகுதி யில் சிறுத்தைபுலியை பார்த்ததாக, ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்தார். மாணவிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் சம்பந்தப்பட்ட பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மட்டும், நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவிகள் அனை வரும் வீடு திரும்பினர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு வனத் துறை அதிகாரி கோபு கூறியதாவது,
திருக்கழுக்குன்றம் பகுதியில் சிறுத்தைபுலியை பார்த்ததாக கூறப்படும் மலைப்பகுதியில், வனத்துறையி னர் ஆய்வு செய்தனர். இதில், சிறுத்தை புலி நடமாட்டத்தை உறுதிப்படுத்துவ தற்கான எந்தவித தடயங்களும் தென் படவில்லை. மேலும், பள்ளியை ஒட்டியுள்ள பகுதியிலும் சிறுத்தை புலியை பார்த்ததாக மாணவியர்களால் கூறப்பட்டதே தவிர, உறுதியான தகவல் இல்லை. மேலும், சிறுத்தை புலியை பிடிப்பதற்கான அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வனத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.
இதுகுறித்து,காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது, “திருக்கழுக்குன் றம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகள், சிறுத்தை புலியை பார்த்தாக ஆசிரியர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நேற்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது” என்றார்.