சமீப காலமாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போரை எரிச்சலடைய வைத்திருக்கின்றன சுங்கச் சாவடிகள். இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழக்கறிஞர் ஒருவர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஒரு மணி நேரமாக காத்திருந்ததால், தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஜோதி என்ற கால் டாக்ஸி வாகன ஓட்டுநர் கூறும்போது, “வார இறுதி தினங்களில் சுங்கச்சாவடிகளில் படாதபாடு படுகிறோம். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் குறைந்தது ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதில் காத்திருக்காமல் போக ‘ஃஃபாஸ்டேக்’ என்று ஒரு முறை இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இதற்காக யாரை எங்கு அணுகுவது என்பது தெரியவில்லை. அதனால்தான் இதுவரை என் வாகனத்தில் அந்த தொழில்நுட்பத்தை பொருத்தவில்லை” என்றார்.
இதுதொடர்பாக ‘ஃஃபாஸ்டேக்’ முறையை செயல்படுத்தும் ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனமான மும்பையைச் சேர்ந்த ஏஜிஎஸ் நிறுவன முகவர் யோகேஷ் கூறும்போது, ‘‘தேசிய நெடுஞ்சாலைத்துறை 'ஃபாஸ்டேக்’ (FASTAG) எனும் மின்னணு முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்படி, ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும், 'ஃபாஸ்டேக்’ வசதிக்கான ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில், வாகன பதிவுச் சான்றிதழ், பான் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் சுங்கச்சாவடி கட்டணத்துக்கான பணம் செலுத்தி, ‘ஆர்.எஃப்.ஐ.டி’ எனப்படும், ‘ரேடியோ பிரிகுவென்சி ஐடென்டிபிகேஷன் ஸ்டிக்கர்’ பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச் சாவடிகளில் உள்ள சென்ஸார் மூலம் வாகனத்தின் பதிவை உறுதி செய்து, சுங்கச் சாவடியில் உள்ள பிரத்யேக வழியில் நிற்காமல் செல்லலாம். ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச் சாவடியை கடந்தவுடன், அதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். ஸ்டிக்கர் இன்றி சென்றால் வழி கிடைக்காது. மையங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று, ஸ்டிக்கரை பெற்றால் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
கட்டணத்தை, ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகளின் இணையதள முகவரிக்கு சென்று, இணையதளம் மூலமாகவும், தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். கட்டணம் தீர்ந்துவிட்டால், கார்டு முடக்கப்பட்டு, அந்த வழியில் செல்ல முடியாத சூழல் ஏற்படும். இந்த கார்டை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள 364 சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதால் 7.5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது” என்றார்.
இதனிடையே, சுங்கச் சாவடிகளில் எளிமையான முறையில் மின்னணு மூலம் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக வானொலி அலைகள் (RFID) மூலம் இயங்கும் அட்டையை, கார் உட்பட புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் பொருத்துமாறு வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுபற்றி கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மணி கூறும்போது, “இப்புதிய திட்டத்தின் மூலம் வாகன எரிபொருள் விரயம் மற்றும் கால விரயம் தவிர்க்கப்படுவதோடு, தேவையற்ற மன உளைச்சலும் தவிர்க்கப்படுகிறது. இந்த முறையை வடமாநிலங்களில் பெரும்பான்மையோர் பயன்படுத்தி வருகின்றனர். அதுபோன்று தமிழகத்திலும் வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினால் சுங்கச்சாவடி பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்” என்றார்.
தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை பயன்படுத்தி வருகின்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி என்ற சரக்கு வாகன ஓட்டுநர் கூறும்போது, “மும்பையில் ஃபாஸ்டேக் பாதையில், ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே செல்லும். ஆனால் தமிழகத்தில்தான் அதை யாரும் சரியாக பின்பற்றுவதில்லை. எனது வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டியும் ஒரு மணி நேரமாக காத்திருக்கிறேன். பிறகு எதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும். டோல்கேட் ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்” என கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மேலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘‘ஃபாஸ்டேக் பாதையில், ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை மட்டுமே அனுமதிக்கிறோம். விடுமுறை நாள் என்பதால், போக்குவரத்து நெருக்கடி என்ற காரணத்தைக் காட்டி, போலீஸார் அனைத்துப் பாதையிலும் வாகனத்தை அனுமதியுங்கள் என்று நிர்ப்பந்திப்பதால் இந்த பிரச்சினை எழுந்துள்ளது” என்றார்.