தமிழகம்

போதை மிட்டாய் விற்பனையை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்: தமிழிசை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் போதை மிட்டாய் விற்பனையை தடுத்து நிறுத்தாவிட்டால் பாஜக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டையில் போதை மிட்டாய் சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்தான். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மாணவனை தமிழிசை இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''தலைநகர் சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் போதை மருந்து கலந்த மிட்டாய் சாப்பிட்டு மயங்கி விழுந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய், சாக்லேட், திண்பண்டங்களில் போதை மருந்து கலந்திருப்பது மிகவும் அபாயகரமானது. இதுபோன்ற போதை மிட்டாய்கள் பள்ளிகளுக்கு அருகில் விற்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாணவர்களை சீரழிக்கும் போதை மிட்டாய் விற்பனையை தமிழக அரசும், காவல் துறையும் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இல்லையெனில் தமிழக அரசை எதிர்த்து பாஜக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தும்'' என்று தமிழிசை கூறினார்.

SCROLL FOR NEXT