2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராகும்படி மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நேரிலோ தனது பிரதிநிதி மூலமாகவோ விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது அதிகாரம் பெற்ற முகவரான அருண் நடராஜன் ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது:
எனது தந்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர். தற்போது எதிர்க்கட்சி முக்கிய தலைவராக உள்ளார். இதனால் அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்தில் என் மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை அமலாக்கத்துறை சுமத்தியுள்ளது.
மேலும் இந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்பதையும் இதுவரை அமலாக்கத்துறை விளக்கவில்லை. ஏற்கெனவே கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 2 முறை எனக்கு சம்மன் அனுப்பியது. அது தொடர்பாக நான் எனது தரப்பு விளக்கத்தை அளித்தும், அதற்கு எந்தவொரு பதிலும் இல்லை. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக எனக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நடந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி சம்மனை ரத்து செய்யும்படி வலியுறுத்தினார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.ராஜகோபாலன், இந்த வழக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குடன் தொடர்புடையது என்பதால், இந்த மனுவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு கிடையாது.
2ஜி தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் அங்கு மட்டுமே விசாரிக்க முடியும் என வாதிட்டார். அதையேற்ற நீதிபதி அது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.