புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் விஜயகுமார்(35), அலெக்ஸ்(28), டேவிட்(25) ஆகியோர், மீன் பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், அந்தப் படகு நேற்று பழுதடைந்து, கடலில் மூழ்கியது. இதனால் மீனவர்கள் 3 பேரும் கடலில் தத்தளித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சக மீனவர்கள், கடலில் தத்தளித்த 3 மீனவர்களையும் மீட்டு, மூழ்கிய படகை தங்களது படகில் கட்டி இழுத்துக் கொண்டு கரைக்குப் புறப்பட்டனர்.
ஆனால், பழுதான படகை இழுத்து வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் கடலோரக் காவல் படையின் உதவியை நாடினர். பின்னர், அங்கு வந்த கடலோரக் காவல் படையினர், கடலில் தவித்த மீனவர்களையும், மூழ்கிய படகையும் கரைக்குக் கொண்டுவந்தனர்.