ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தும் விவகாரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெ.மனோகர், வடசென்னை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு நலச் சங்க பொதுச் செயலாளர் எம்.ஆனந்தன் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
சென்னை மாநகரில் 74 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணத்துடன் கூடிய மீட்டர்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஆட்டோக்களில் பொருத்த வேண்டும் என்று ஆகஸ்ட் 25-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், பழைய மீட்டர்களில் புதிய கட்டணத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மீட்டர்களை உருவாக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட 39 மெக்கானிக் மையங்கள் மட்டுமே சென்னை மாநகரில் உள்ளன.
இந்த சூழலில் அரசு நிர்ணயித்துள்ள அவகாசத்துக்குள் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்களுக்கான மீட்டர்களை தயார் செய்வதற்கான சாத்தியம் இல்லை. ஆகவே, புதிய கட்டணத்துடன் கூடிய மீட்டர்களை அனைத்து ஆட்டோக்களிலும் இந்த அவகாச காலத்துக்குள் பொருத்த வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளதற்கு தடை விதிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த தேதிக்குள் மீட்டர்களை பொருத்தவில்லையெனில், ஆட்டோக்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி கே.கே.சசிதரன் விசாரணை மேற்கொண்டார். அக்டோபர் 15-ம் தேதி வரை விதிக்கப்பட்ட அவகாசத்தை நவம்பர் 15-ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆக, புதுப்பிக்கப்பட்ட மீட்டர் பொருத்துவதற்கு உரிய அவகாசத்தை அரசு அளித்துவிட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி சசிதரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.