வசதியான வீட்டில் பிறந்தவர்கள் செல்லப்பிராணிகளாக நாய், பூனைகளை வளர்ப்பது வாடிக்கை. வயதான, பால் சுரப்பு நின்றுபோன அடிமாடுகளை, வீடு நிறைய வளர்த்தால் வித்தியாசம் தானே? ஜீவகாருண்யத்தோடு இப்பணியில் ஈடுபட்டுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த சசிகலா, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்.
நாகரீக மாற்றத்தால், சொந்த பந்தங்களையே உதறித் தள்ளி விட்டுப் போகும் இன்றைய உலகில், அடிமாடுகளின் நலனுக்காகவே திருமணம் கூட செய்து கொள்ளாமல், அவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா.
‘பொதுவாகவே கால்நடை வளர்ப்போம்... காசை குவிப்போம்’ என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். சசிகலா வீட்டில் 50க்கும் மேற்பட்ட அடிமாடுகள் நிற்கின்றன. அவற்றை பராமரிக்க மாதம் ரூ. 35,000 வரை நஷ்டப்படுகிறார் சசிகலா. இதுபற்றி, சசிகலா சொல்வதைக் கேட்போம்.
57 மாடுகள்:
எங்கள் தாத்தா காலத்துல வீடு நிறைய கால்நடை நிற்கும். அக்காலத்தில் எங்க வீட்டுல நிற்கும் மாடுகள்தான், கால்நடைப் போட்டியில் பரிசு வாங்கும். என் அப்பாவும் நிறைய மாடுகள் வச்சுருந்தாங்க. அப்பா காலமானதும், டீச்சர் வேலை பார்த்த அம்மாவால மாடுகளை பராமரிக்க முடியல. வள்ளியூர்ல ஒருத்தருக்கு மாடுகளை கொடுத்துட்டாங்க. வீட்டுல மிஞ்சுனது என்னவோ 3 மாடுங்க தான். அதோட வாரிசுகள், தெருவோரமா வயசாகி சுத்துற மாடுங்க எல்லாம் சேர்த்து, 57 மாடுகளை வளர்க்கிறேன்.
கறிக்கடையில் மீட்பு பணி:
பொதுவாக மாடு வளர்க்குறவங்க, பால் கொடுக்கும் வரைதான் பசு மாட்டை வளர்ப்பாங்க. உழைக்கும் வரைதான் காளை மாட்டை வளர்ப்பாங்க. அதன்பின், கறிக்கடைக்கு வித்துருவாங்க. அப்படிப்பட்ட அடிமாட்டைத்தான் நான் வளர்க்குறேன். சில சமயம் கறிக்கடையில் நிற்கும் மாட்டைக் கூட பேரம் பேசி வாங்கிட்டு வந்திருக்கிறேன்.
கரிசனம் ஏன்?
ஒரு தடவை, நாகர்கோவிலில் பஸ்ல போயிட்டு இருந்தேன். அப்போ நான் பார்த்த காட்சியை, இப்போ நினைச்சாலும் பயம் தொத்திக்குது. கறிக்காக, ஒரு காளை மாட்டை நடு முதுகுல அடிச்சுக் கொன்னாங்க. அதற்கு பிறகுதான், பராமரிக்க முடியாம விற்கப்படும் அடிமாடுகளை விலைக்கு வாங்கி பராமரிப்பதுன்னு, முடிவு செய்தேன்.
ஒரு காலத்தில், வயசான மாடுகளை ஊரிலேயே ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பராமரிப்பாங்க. ஆனால், இன்னிக்கு வயசான மாடுகளை கறிக் கடைக்குதான் அனுப்பி வைக்குறாங்க. அவற்றை விலை கொடுத்து வாங்கி, பராமரிப்பதை வேள்வியாக செய்கிறேன் என்று, தாயுள்ளத்தோடு சொன்னார் சசிகலா.