மரபணு மாற்றுப் பயிர்கள் சாகுபடிக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் மூலக்கூறு உயிரியல் மைய முன்னாள் இயக்குநரும், மூத்த வேளாண் விஞ்ஞானியுமான எஸ்.சதாசிவம் கூறினார்.
‘மரபணு மாற்றுப் பயிர்கள் ஒரு விஞ்ஞானியின் பார்வை’ என்ற அவரது நூல் வெளியீட்டு விழா கோவையில் நேற்று நடைபெற்றது.
உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்க நிர்வாகியும், ராசி விதைகள் நிறுவனத் தலைவருமான எம்.ராமசாமி நூலை வெளியிட்டார். அவர் பேசும்போது, “விவசாயப் புரட்சியால் உணவுத் தானியங்களின் உற்பத்தி அதிகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி பெற்றோம். முன்பு 135 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி உற்பத்தி, தற்போது 350 லட்சம் பேல்களாக அதிகரித்துள்ளது. உலகில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, பருத்தி நுகர்வும் 120 லட்சம் பேல்களில் இருந்து 250 லட்சம் பேல்களாக அதிகரித்து, ஜவுளித் துறை பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வேளாண் துறையில் ஏற்பட்ட நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்கு முக்கியக் காரணம்” என்றார்.
வேளாண் விஞ்ஞானி எஸ்.சதாசிவம் பேசும்போது, “மரபணு மாற்றுப் பயிர்கள் என்பது இயற்கை முறை விவசாயத்துக்கு எதிரானது அல்ல. ஆனால், இதுகுறித்து உரிய விழிப்புணர்வு இல்லாமல், மரபணு மாற்றுப் பயிர்களால் தீமை மட்டுமே இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தற்போது மரபணு மாற்றுப் பயிரில் பருத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பயிர்களிலும் மரபணு மாற்றுப் பயிர்களை கொண்டுவர வேண்டும். இதனால் பூச்சிக்கொல்லி, உரங்களின் தேவை குறையும். உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் பயனடைவர். மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து, அதன் சாதக, பாதகங்களை விவசாயிகளுக்கு விளக்க அரசு முன்வர வேண்டும்.
இந்தியாவில் உள்ள வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத, பயனுள்ள மரபணு மாற்றுப் பயிர்களை கண்டுபிடிக்கத் தயாராக இருக்கிறார்கள். இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து மரபணு மாற்றுப் பயிர்கள் இறக்குமதியைத் தவிர்த்து, இங்கிருந்து தரமான மரபணு மாற்றுப் பயிர்களை ஏற்றுமதி செய்யலாம் என்றார்.