பாமகவினர் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது பற்றி சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக பாமக செயல்பட்டு வருகிறது. அதனால் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, காவல்துறையை பயன்படுத்தி பாமகவை ஒடுக்கி வருகிறார். கடந்த 2013-ல் மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழா நடந்தபோது பாமகவினர் இருவர் கொல்லப்பட்டனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் அதை கொலை வழக்காக காவல்துறையினர் பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த ராமதாஸுக்கு அனுமதி மறுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது, ஒரே மாதத்தில் 134 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டங்களை போட்டது என பாமகவினர் மீது இதுவரை 1037 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் ஜி.கே.மணி கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வார காலத்துக்கு ஒத்திவைத்தார்.