தமிழகம்

சங்கரராமன் கொலை வழக்கில் நவ. 27-ல் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சங்கரராமன் கொலை வழக்கில் இம்மாதம் 27-ல் தீர்ப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்ட 23 பேரில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, கே.எஸ்.குமார் உள்பட 15 பேர் புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில்ஆஜராகினர்.

சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து நீதிபதி சி.எஸ்.முருகன், இவ்வழக்கின் தீர்ப்பு நவ.12ல் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, "இம்மாதம் 27-ஆம் தேதி சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டோர் அனைவரும் ஆஜராக வேண்டும்" என்று தெரிவித்தார்.

அப்போது, உடல்நிலை காரணமாக ஜயேந்திரர் மட்டும் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். விஜயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நின்றிருந்தனர். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ் ஆஜரானார்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ஆம் தேதியன்று தீர்ப்பு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT