தமிழகத்தில் வறட்சி ஒழிய வேண்டும் என்றால், கிடைக்கும் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவின் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை வறட்சி இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்த கருத்தரங்கம் சென்னை நுங்கம் பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் ராஜேந்திர சிங் பங்கேற்று பேசியதாவது:
ராஜஸ்தான் மாநிலம் குறைந்த மழைப் பொழிவை பெறும் பகுதி. இம்மாநிலத்தில் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது வறட்சி ஒழிக்கப்பட்டுள் ளது. ராஜஸ்தான் மாநிலத்துடன், ஒப்பிடும்போது, பல மடங்கு அதிக மழைப் பொழிவை பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ராஜஸ்தானில் ஒரு மரம் 30 ஆண்டுகளில் பெறும் வளர்ச்சியை, தமிழகத்தில் 10 ஆண்டுகளிலேயே பெற முடியும். அந்த அளவுக்கு மழைப் பொழிவு உள்ளது. தமிழகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வறட்சியை எளிதாக விரட்ட முடியும்.
நதிநீர் இணைப்பு அரசியல்
நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் வறட்சியை ஒழிக்க முடியாது. இது அரசியல் செய்வதற்கு மட்டுமே தீர்வைத் தரும். வறட்சி ஒழியாது. தமிழகத்தில் வறட்சியை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில், நீர், நிலம், மரம், விவசாயம், உணவு, மனித உடல் இவற்றுக்கு இடையிலான உறவை ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர், மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை நவீன தொழில்நுட்பம் மூலமாக கண்டறிந்து, வரைபடம் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அங்கு இன்று ஆக்கிரமிப்புகள் இருக்கலாம். அதை இன்றைய அரசு அகற்ற தைரியம் இல்லாமல் இருக்கலாம். இன்றைய அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக வும், மக்களுக்கு எதிராகவும்தான் செயல்பட்டு வருகிறது. பிற்காலத் தில் நிலைமை மாறலாம். அப்போது உருவாகும் மக்கள் நலன் சார்ந்த அரசு, நாம் இன்று உருவாக்கி வைக்கும் நீர்நிலை குறித்த வரை படத்தை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற முயலும். வறட்சியை ஒழிக்க நீர்நிலைகளை மீட்க வேண்டியது அவசியம்.
கை ஏந்த தேவையில்லை
தண்ணீர் கேட்டு, தமிழகம் எந்த மாநிலத்திடமும் கை ஏந்தத் தேவையில்லை. இங்கு கிடைக்கும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கிராம அளவில் சிறு சிறு குளங்களை வெட்டி, நீரைத் தேக்க வேண்டும். மேலும் கிடைக்கும் மழைநீரும், பயன்பாடும் சம நிலையில் இருக்க வேண்டும். பயன்பாடு அதிகரிக்கும்போதுதான் வறட்சி ஏற்படுகிறது. சேமித்த நீரைக் கொண்டு, அதிக நீரை உறிஞ்சும் நெல், கரும்பு போன்றவற்றை பயிரிடுவதைத் தவிர்த்து, குறைந்த நீரை உறிஞ்சும் தானியம் மற்றும் பயறு வகை பயிர்களை பயிரிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழகத்தில் வறட்சி ஒழியும். தண்ணீர் கேட்டு பிற மாநிலங்களிடம் கை ஏந்த தேவையில்லை. தமிழகம் பிற மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்கும் நிலை உருவாகும்.
தமிழகத்தில் என்னால் மட்டும் வறட்சியை போக்க முடியாது. அந்தந்த பகுதியில் உள்ள மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள், வறட்சியை ஒழிக்க தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை தெரிவிக்கவும். அடுத்த சில தினங்களில் மீண்டும் கூடுவோம். வறட்சியை ஒழிக்கும் செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் பங்கேற்று பேசியதாவது:
சென்னை மாநகரில் ஆயிரக் கணக்கான நீர்நிலைகள் இருந் தன. இப்போது அனைத்தும் ஆக்கி ரமிக்கப்பட்டுள்ளன. இங்கு 3 முக்கிய நீர் வழிகள் இருந்தும், வெள்ளம் ஏற்படுகிறது. அடுத்த ஆண்டில் வறட்சி ஏற்படுகிறது. இங்கு நல்ல மழை கிடைக்கிறது. ஆனால் கிடைக்கும் மழைநீர் சேமிக் கப்படாமல் வீணடிக்கப்படுகிறது. தமிழகத்தில் வறட்சி ஒழிய, ராஜேந்திர சிங் வழங்கும் ஆலோ சனைகளை பின்பற்றுவோம் என்றார்.