தமிழகம்

திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரண்டு மாதங்களில் அகற்ற உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த கார்த்திக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்துக்களின் முக்கியக் கடவுளான முருகனின் ஆறுபடை வீடுகளில் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முதல்படை வீடாக உள்ளது.

இங்குள்ள கிரிவலப்பாதையில் முக்கியத் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலப்பாதையில் சுற்றி வந்து தரிசனம் செய்வர்.

பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் கிரிவலப் பாதை சுற்றி தேரோட்டம் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனத்திற்காக வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கடைகள் நிறுவனங்கள் என ஏராளமான ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் தேரோட்டம் நடைபெறும் போது மிகுந்த நெரிசல் ஏற்படுக்கிறது. மேலும் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் கிரிவலப்பாதையை சுற்றி வர முடியாமல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அமர்வு, திருப்பரங்குன்றம் மலையின் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரண்டு மாதங்களில் அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்

SCROLL FOR NEXT