உபரி வருமானம் ஈட்டிய 2 லட்சத்து 44 ஆயிரத்து 519 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.51.35 கோடி ஊக்கத்தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பால்வளத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. பால்வளத் துறைச் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆவின் நிர்வாக இயக்குநர் சுனீல் பாலிவால், சென்னை இணையத்தின் தலைவர் அ.மில்லர், துறை செயலர் ச.விஜயகுமார் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ரமணா பேசியதாவது: உற்பத்தியாளர்க ளின் நலனைக் கருத்தில்கொண்டு கடந்த 10 மாதத்தில் கொள்முதல் விலை பசும்பால் லிட்டருக்கு ரூ.8-ம், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.7-ம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உபரி வருமானம் ஈட்டிய சேலம், மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 44 ஆயிரத்து 519 உற்பத்தியாளர்களுக்கு ரூ.51.35 கோடி ஊக்கத்தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை, உற்பத்தியாளர்களுக்கு கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
உயர்த்தப்பட்டுள்ள கொள்முதல் விலை குறித்த தகவலை களப்பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிக அளவில் பால் வழங்க அறிவுறுத்த வேண்டும். மாவட்ட ஒன்றியங்கள் இலக்கை நிர்ணயித்து, பால் கொள்முதல் செய்ய வேண்டும்.
புதிய தொடக்க பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.