தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய தொழில் வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை சமஸ்கிருத கல்லூரியில் ஆன்லைனில் சமஸ்கிருத மொழி படிக்கும் திட்டத்தை நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு இப்பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சொல் வதை ஏற்க முடியாது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்களை சந்திக்கவைத்து பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்களே என்ற வருத்தம் பாஜக அரசுக்கு உண்டு.
தமிழக மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீனவர் படுகொலை சம்பவம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு பிரதமருடன் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இலங்கை கடற்படை கூறியிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே நடவடிக்கை எடுப்பதற்கான சூழல்கள் உருவாகியுள்ளன. மத்தியில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து ஆறுதல் கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அப்போது எங்களுக்கு தமிழகத்தில் பிரதிநிதித் துவமே இல்லை. எனவே, தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு கண்டுகொள் ளாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.
ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டம் குறித்து அனைவரும் தற்போது மத்தியில் உள்ள பாஜக அரசு மீது பழிபோடுகிறார்கள். இந்த திட்டம் கடந்த 7, 8 ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசல் மக்களையும் இயற்கை எரிவாயு திட்ட அதிகாரிகளையும் சந்திக்கவைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்துதான் இத்தகைய ஏற்பாடுகளை மத்திய அரசு செய்கிறது. இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.