குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு நேரில் ஆதரவு தெரிவிக்கவும், மனுத்தாக்கல் நிகழ்வில் பங்கேற்கவும் தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சிகள் தற்போது ஆதரவு தெரிவித்து வரு கின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ஆதரவு கோரினர். இதையடுத்து இருவரும் தங்கள் அணியின் ஆதரவை பாஜக வேட்பாளருக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் ராமநாத் கோவிந்த் 23-ம் தேதி (இன்று) மனுத் தாக்கல் செய்கிறார். இதில் பங்கேற்க நேற்று மாலை 5 மணிக்கு முதல்வர் கே.பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து, மாலை 7 மணிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இருவரும் இன்று காலை டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்கின்றனர். அதன்பின், மனுத்தாக்கல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர். அந்த தருணத்தில் பிரதமர் மோடியை இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தினகரன் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் ஆதரவு யாருக்கென்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.