தமிழக சட்டப்பேரவை கூட்டம் 5 நாட்கள் நடக்கும் என பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 15 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் கே.ரோசய்யா பேரவையில் உரையாற்றி தொடங்கி வைத்தார்.
பேரவை கூட்டம் முடிந்ததும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்ட முடிவில், பேரவை தலைவர் பி.தனபால், ''அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி, 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பேரவை காலை 10 மணிக்கு கூடும். அப்போது, திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எஸ்.எம்.சீனிவேல் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இது தவிர 4 முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அத்துடன் பேரவை நிகழ்ச்சிகள் முடியும்.
தொடர்ந்து, 18,19 ஆகிய தினங்கள் விடுமுறை. 20-ம் தேதி திங்கள் கிழமை, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும். விவாதமும் தொடங்கும், 21, 22 தேதிகளில் விவாதம் தொடர்ந்து நடக்கும். 22-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானத்தின் மீது பேசுவார்கள். 23-ம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலுரை அளிப்பார். சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்'' என்று கூறியுள்ளார்.