கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி முதல் மின் வெட்டு என்பது தமிழகத்தில் அறவே இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் இன்று பேசியதாவது:
தமிழகத்தில் வேளாண் துறைக்கு திமுக ஆட்சியில் ரூ.7,655 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.23,583 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்நீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.800 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 2010-11 திமுக ஆட்சியில் 75 லட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, கடந்த 2014-15ல், 127 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. பால் வளத்துறை உட்கட்டமைப்புக்காக ரூ.593 கோடியே 65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதலும் 20.67 லட்சம் லிட்டரில் இருந்து 29 லட்சத்து 41 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது.
சென்னை மாநகராட்சி, இதர நகராட்சிகள், பேரூராட்சிகளில் சாலை மேம்பாடு, பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை என 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள் ரூ.30,513 கோடிக்கும் அதிகமான மதிப்பில் செயல்படுத்தப்படுகின்றன. இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 275 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 98,362 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மின் உற்பத்தி
கடந்த 2011-ம் ஆண்டு இந்த அரசு பதவியேற்றபோது மின்வெட்டு பிரச்சினை சவாலாக இருந்தது. தற்போது 4,455 மெகாவாட் மின் நிறுவு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,330 மெகாவாட் கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, 2,830 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. சூரிய ஒளி மின்சாரம் மற்றும் இதரவகை மின்சாரத்தை சேர்த்து தற்போது 7,485.5 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைத்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி முதல் மின் வெட்டு என்பது தமிழகத்தில் அறவே இல்லை. அடுத்த 6 மாதங்களில் மேலும் 1,232 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்.
தமிழகத்தில் புதிய தொழில் கொள்கை, வாகன உற்பத்திக்கு புதிய கொள்கை, உயிரியல் கொள்கை, தொலை நோக்குத்திட்டம் 2023 ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, உற்பத்தி வருவாய், ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2011 மே முதல் கடந்த செப்டம்பர் வரை ரூ.62,522 கோடி அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இது முந்தைய 11 ஆண்டுகளில் பெறப்பட்டதைவிட 2 மடங்கு அதிகம்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பு போடப்பட்ட 33 ஒப்பந்தங்களில் 29 நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.