தமிழகம்

கோவை வடக்கு, தெற்கில் வருவாய் குறைந்த டாஸ்மாக் கடைகளே மூடப்பட்டுள்ளன: பொதுமக்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

வருவாய் குறைந்த டாஸ்மாக் மதுக்கடைகளே, கோவை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று, தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கட்டமாக 500 கடைகள் மூடப்படும் என அறிவித்தார். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரமும் காலை 10 மணிக்கு பதிலாக பகல் 12 என மாற்றப்பட்டது.

முதல்வர் அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் நேற்று 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. கோவை மண்டலத்தில் 60 கடைகள் அடங்கும். கோவை மாவட்டத்தில் காந்திபுரம் 2-வது வீதி, வால்பாறை மூடிஸ், வால்பாறை ரொட்டிக் கடை, பொள்ளாச்சி டவுன், சுல்தான்பேட்டை ஜெயகிருஷ்ண புரம் ஆகிய இடங்களிலுள்ள 5 கடைகள் மூடப்பட்டுள்ளன.

இருப்பினும், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு வந்த குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படவில்லை. பிரச்சினைக்கு உரிய பார் இல்லாத, வருவாய் குறைந்த கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட்டியலில் இல்லை

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத டாஸ்மாக் கடை ஊழியர் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் வடக்கில் 168, தெற்கில் 137 என 305 கடைகள் உள்ளன. வடக்கு மாவட்டத்தில் காந்திபுரத்தில் இருந்த ஒரு கடை மட்டும் மூடப்பட்டுள்ளது.

அந்தக் கடையை காலி செய்யுமாறு கடந்த 2 ஆண்டுகளாக கட்டிடத்தின் உரிமையாளர் வற்புறுத்தியும், டாஸ்மாக் நிர்வாகம் கடையை மூடவில்லை. இதனால், ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் கடையின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டார். பார் மற்றும் மின்சாரம் இல்லாமல் கடை இயங்கியது.

பேருந்து நிலையம் அருகே இருந்தாலும், கடை வருவாய் ரூ.25 ஆயிரத்துக்குள் சுருங்கிவிட்டது. கோவை நகரில் பொதுமக்கள் அடையாளம் காட்டிய கடைகளை மூடாமல், இந்தக் கடை மட்டும் பிரச்சினை காரணமாகவே மூடப்பட்டுள்ளது.

தெற்கு மாவட்டத்தில் மூடப்பட்ட 4 கடைகளுக்கும் பார் வசதி கிடையாது. அந்தக் கடைகளும் பல்வேறு வகையில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பிரச்சினையாக விளங்கி வந்தவை. ஏனைய கடைகளுடன் ஒப்பிடுகையில், அவற்றின் வருவாயும் குறைவு.

முன்னதாக, 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்காக எந்தெந்தக் கடைகளை மூடலாம் என பட்டியலிடப்பட்டது. வடக்கில் 14, தெற்கில் 11 கடைகள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், பட்டியலில் இடம்பெற்ற எந்தக் கடையும் மூடப்படவில்லை. பார் நடத்துபவர்களின் நிர்பந்தம், தலையீடு காரணமாக, அவை மீது கை வைக்கப்படவில்லை” என்றார்.

போராட்டம்

கோவை மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் சுமார் 15 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி, ஆண்டுக்கணக்கில் போராட்டம் நீடித்து வருகிறது.

அதில், பெரியநாயக்கன்பாளை யம், டவுன்ஹால், உக்கடம் பேருந்து நிலையம், மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள கடை, காய்கடை பேருந்து நிறுத்தம், சாய்பாபா காலனி, செல்வபுரம், ஒலம்பஸ் 80 அடி சாலை, போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளும் அடங்கும். ஆனால், இதில் எந்தக் கடைகளும் மூடப்படாதது, மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காய்கடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடை மூடப்படாததைக் கண்டித்து, அப் பகுதி பொதுமக்கள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாக மேலாளர் ராம சாமி கூறும்போது, “மூடப்பட்டுள்ள கடைகள் ஒவ்வொன்றும், தினமும் தலா ரூ.80 ஆயிரம் வரை வருமானம் உள்ளவை. பார் வசதி கிடையாது. நல்ல வருமானம் வரக்கூடிய கடைகள்தான்.

அந்தக் கடைகளில் வைக்கப் பட்டுள்ள மது பாட்டில்கள், ஏனைய பொருட்கள் இன்று (நேற்று) இரவுக் குள் குடோனுக்கு கொண்டுவரப் படும். அங்கு பணிபுரிந்த 20 பணியாளர்களுக்கும் மாற்று இடம் வழங்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT