தமிழகம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக இரட்டை நிலை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தியும், ஆதரவாக தமிழக பாஜக தலைவர்களும் பேசுவது அக்கட்சியின் இரட்டை நிலையை வெளிப்படுத்துவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனை தென் மாவட்டங்கள் குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட ஊர்கள் களையிழந்து காணப்பட்டன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என்றும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் தமிழக பாஜக தலைவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டையே இது வெளிப்படுத்துகிறது. மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது பிரதமரின் கடமையாகும். ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT