இளைஞர்களிடையே பெருகி வரும் தற்கொலைகளை தடுக்க மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள பழக வேண்டும் என்று இளைஞர்களுக்கான ஊக்க மூட்டும் நிகழ்ச்சியில் கூறப்பட்டது.
சென்னை எழும்பூரில் சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் வாழ்க்கையில் தோல்விகளை வெற்றிகொண்டு சந்தோஷம் காண்பது எப்படி என்ற தலைப்பில் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ராஜன் உரையாற்றினார்.அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தான் அதிக தற்கொலைகள் நடந்திருக்கின்றன. தற்கொலை என்பது நொடிப் பொழுதில் எடுக்கும் அவசரமான முடிவு. ஒரு டம்ளர் காபி குடிக்கும் நேரத்தில் சற்று யோசித்துப் பார்த்தால் தற்கொலையை தடுக்கலாம்.
நிரந்தரமற்ற அற்பமான இன்பங்களை நோக்கி செல்வதை தவிர்த்து நிலைத்து நிற்கும் சந்தோஷத்தை நோக்கி செல்ல வேண்டும். ஒருவருக்கு குடும்பத்தில் நிலைத்த சந்தோஷம் கிடைக்கும். அதேபோன்று நற்குணங்கள் கொண்டு எல்லோரிடமும் அன்பாக இருந்தால் சந்தோஷம் கிடைக்கும்.
புயலை தாங்கி நிற்கும் மரம் தான் நீண்ட நாள் உயிர் வாழும். அதே போன்று பல சவால்களை, துன்பங்களை எதிர்கொள்ளும் மனிதர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.