சென்னையில் 22-வது ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கிவைத்தார்.
ஐரோப்பிய யூனியன் சார்பில் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த சிறந்த படங்கள் திரையிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழாவை சென்னை, புதுச்சேரி, கோவை ஆகிய இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்தியாவுக்கான போர்ச்சுகல் தூதர் ஜோஆ டா கமாரா ஆகியோர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கிவைத்தனர். திரைப்பட விழாவுக்கான ஏற்பாடுகளை ஐ.சி.ஏ.எஃப். (இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுன்டேஷன்) செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ பேசும்போது, “தமிழகத்தை பொருத்தவரையில் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கத்தை கட்டமைத்த அண்ணாவும் சினிமா, நாடகங்கள் மூலம் மக்களுக்கு கருத்துகளை சொன்னார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சினிமாத் துறைக்கு பல விஷயங்களை செய்துள்ளார். சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என்று இறுதியாக அவர் தெரிவித்திருந்தார். அந்த விழா விரைவில் நடத்தப்படும்” என்றார்.
தொடக்க விழாவில் இந்திய திரைப்பட விழாக்கள் இயக்குநரகத் தின் இயக்குநர் சி. செந்தில்ராஜன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணைய உறுப்பினர் எம்.ராஜா ராம், சென்னைக்கான ஜெர்மனி துணைத் தூதர் ஆஷிம் ஃபாபிக், சென்னைக்கான பெல்ஜியம் துணைத் தூதர் பார்ட் டி க்ரூஃப், திரைப்பட இயக்குநர்கள், நடிகர் கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மே 4-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவில் போர்ச்சுக்கல், ஆஸ்திரியா, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட 22 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சென்னை யில் மேக்ஸ் முல்லர் பவன், சென்னை அல்லயன்ஸ் பிரான்ஸே ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.