தமிழகம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமானுஜர் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு

செய்திப்பிரிவு

ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழாவை யொட்டி இந்தியன் வங்கி சார்பில் ஸ்ரீராமானுஜர் உருவம் அச்சிடப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டை நேற்று வெளியிடப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் சார்பில் ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழா கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் ஏப்.28-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. இவ்விழாவில் தினந்தோறும் உபன்யாசங்கள், சிறப்பு பஜனைகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நேற்று நடைபெற்ற விழாவில் இந்தியன் வங்கி சார்பில் ஸ்ரீராமானுஜரின் உருவம் அச்சிடப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப் பட்டது. இந்த அஞ்சல் அட்டையை இந்தியன் வங்கியின் மண்டல உதவிப் பொது மேலாளர் ஜி.நாராயணசாமி வெளியிட, ஸ்ரீரங்கம் கோயிலின் இணை ஆணையரும் செயல் அலுவல ருமான பொ.ஜெயராமன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் ஸ்ரீரங்கம் கிளை மேலாளர் நாராயணன், ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மைக்கேல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியன் வங்கி சார்பில் ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்குப் பின், இந்த அஞ்சல் அட்டைகள் அஞ்சல் நிலையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவின் தொடர்ச்சியாக, இன்று (மே 6) மாலை 6 மணிக்கு பேராசிரியர் மதுசூதனன் கலைச் செல்வனின் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு ஆர்.காஷ்யப் மகேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை ஆகியவையும், மே 7-ம் தேதி மாலை 4 மணிக்கு ஆர்.கணேசனின் நாதசங்கமம், 5 மணிக்கு அருண் மாதவனின் பஜனை, மாலை 6.30 மணிக்கு ஸ்ரீராமானுஜ வைபவம் என்ற தலைப்பில் கிருஷ்ணப்பிரேமியின் உபன்யாசம் ஆகியவை நடைபெறவுள்ளன.

SCROLL FOR NEXT