தமிழகம்

இளைஞரை சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளரை கைது செய்க: வைகோ

செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில், காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக் கைதியை சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று ஆளுநர் ரோசய்யா சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், விசாரணைக்கு அழைத்துவந்த இளைஞரை காவல் நிலையத்திலேயே சுட்டுக்கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துவந்த சையது முகமது என்ற இளைஞரை உதவி ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள செயல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவல் உதவி ஆய்வாளரை பணி இடைநீக்கம் செய்தது மட்டும் தகுந்த நடவடிக்கை அல்ல. சையது முகமது கொலையை சந்தேக மரணமாக சட்டப் பிரிவு 176 இன் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை மாற்றி, உதவி ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

கொலை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய சமூக இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும். தமிழக காவல்துறையில் உள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறல்களில் ஈடுபடுவதும், காவல் நிலையங்களில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கடந்த ஆகஸ்ட் 14 அன்று, ஒரு கொலை தொடர்பாக உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தனியார் உணவக சமையல் உதவியாளரான சந்திரா என்ற பெண், காவலாளிகளின் மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சந்திராவுக்கு தமிழக அரசு இரண்டு இலட்ச ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்றும், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னை புரசைவாக்கம் டாணா தெருவில் நேற்று மாலை (15 ஆம் தேதி) நடைபெற இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு திடீரென்று காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்தக் கருத்தரங்கம் நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, முறையான அனுமதி கிடைத்த பின்னரே கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு காவல்துறை அனுமதியை திரும்பப் பெற்றது ஏன்?

நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் காவு கொடுக்கப்பட்டதைப் போல, மார்க்சிஸ்ட் கட்சி நடத்த இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு இப்போதும் அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான பேச்சுரிமையையும், சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் உரிமையையும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தட்டிப் பறித்துள்ள செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT