திமுக–அதிமுக அரசியல் போட்டியால் நாட்டின் இறையாண்மை சூறையாடப்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மூத்த தலைவர் குமரி அனந்தன், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது ஞானதேசிகன் பேசியதாவது
கருணாநிதி ஆட்சியில் மதுக்கடைகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது, 1972-ல் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில்தான் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வகுப்பு மாணவர்கள் சிலர் மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்திருந்தனர்.
‘அரசே மதுவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சுவையை தெரிந்துகொள்வதற்காக மது அருந்தினோம்’ என்றார்கள். தற்போது இந்த மதுக்கடைகள் டாஸ்மாக்காக மாறி பொதுமக்கள் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அரசு உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க சட்டசபையில் முடிவெடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கையைச் சேர்ந்தவர்கள் சதி செய்து, தமிழகத்தில் உள்ளோரின் துணையுடன் பாஸ்போர்ட் இல்லாமல் கள்ளத்தோணியில் தமிழகத்துக்கு வந்து சதிச் செயலை செய்துள்ளனர். அவர்களை விடுவித்தால்கூட அவர்களால் இலங்கைக்கு செல்லமுடியாது. ஏனெனில் அவர்களுக்கு சட்ட ரீதியான பாஸ்போர்ட்டே இல்லை.காங். ஆட்சியிலும் தவறு இருக்கிறது எங்கிருந்தோ வரும் உத்தரவுக்கு, எங்கிருந்தோ வரும் பணத்துக்கு இங்கே சிலர் அமைப்புகளின் பெயரில் செயல்படுகிறார்கள். அவர்களைப் பற்றி விசாரிக்க லாயக்கற்றவர்களாக மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள்? நம்மிடமும் தவறு இருக்கிறது. இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்த விவகாரத்தில், ராஜீவ்கொலையை வைத்து தமிழகஅரசியல் கட்சிகள் அரசியல்நடத்துகின்றன. திமுக – அதிமுக
வின் அரசியல் போட்டியால் நாட்டின் இறையாண்மை சூறையாடப்படுகிறது. இந்த பிரச்சினையில் ஜெயலலிதா ஆனாலும், கருணாநிதி ஆனாலும் அவர்கள் தவறான நிலை எடுத்தால் அது தவறுதான்.
மோசமான விளைவு ஏற்படும்
திமுக தலைவர் கருணாநிதி அரசியல் சதுரங்கத்தில் கெட்டிக்காரர். அவர் அதிமுகவை மாட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், ‘3 பேரும் விடுதலையானால் இரட்டிப்பு மகிழ்ச்சி’ என்றார். இதுதெரியாத முதல்வர், ‘3 பேர் என்ன.. 7 பேரையுமே விடுதலை செய்கிறோம்’ என்று அறிவித்துள்ளார். அவரது முடிவு எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.