போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீடு தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பமும் தீபக்கும் சேர்ந்து சதி செய்து ஜெயலலிதாவை கொன்றுவிட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற பெயரில் புதிதாக ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நிருபர்களிடம் பேசிய தீபா, ‘‘ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் எனக்கும் எனது சகோதரர் தீபக்குக்கும்தான் சொந்தம்’’ என்று கூறியிருந்தார். தீபக்கும் பலமுறை இந்தக் கருத்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 9.30 மணி அளவில் தனது ஆதர வாளர்களான ராஜா, பாலாஜி, காஞ்சிபுரம் மண்டல எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொறுப் பாளர் என்.ராமச்சந்திரன் ஆகியோ ருடன் தீபா போயஸ் தோட்டத் துக்கு சென்றார். வீட்டில் வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கேமராமேன் மீது தாக்குதல்
இதற்கிடையே, தீபா தனது ஆதர வாளர்களுடன் போயஸ் தோட்டத் துக்கு வந்துள்ள தகவல் கிடைத் ததும் ஏராளமான பத்திரிகையாளர் களும், தொலைக்காட்சி கேமரா மேன்களும் அங்கு குவிந்தனர். ஒரு தொலைக்காட்சி கேமராமேன் போயஸ் தோட்ட வீட்டுக்குள் நுழைந்து தீபாவையும், அங்கிருந் தவர்களையும் படம் பிடித்தார். இதை வீட்டுக்குள் இருந்து பார்த்த சிலர், அந்த கேமராமேனையும், அவருடன் இருந்த நிருபரையும் சரமாரியாக தாக்கினர்.
பின்னர், அந்த கும்பல் தீபாவை யும், அவரது ஆதரவாளர்களையும் போயஸ் தோட்ட வீட்டுக்குள் வைத்து பூட்டினர். சிறிது நேரம் கழித்து அவர்களை வீட்டுக்குள் இருந்து வெளியேற்றினர்.
பாதுகாவலர்கள் தாக்கினர்
போயஸ் தோட்ட வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட தீபா, அங்கு நின்றிருந்த பத்திரிகை யாளர்களிடம் கூறியதாவது:
போயஸ் தோட்டத்துக்கு நாங்கள் வரும்போது போலீஸார் யாரும் இல்லை. 2 ஊழியர்களும் பணி யாளர் ராஜம்மாள் மட்டுமே இருந் தனர். உள்ளே இருந்த பாதுகாவ லர்கள் என்னையும் பத்திரிகை யாளர்களையும் தாக்கினர். பத்திரி கையாளர்களை அவர்கள் எப்படி தாக்கலாம்? நான் உள்ளே இருந்து தப்பித்து வெளியே வந்ததற்கு காரணம் பத்திரிகையாளர்கள்தான். நானும் எனது பாதுகாவலரும் அடித்து வெளியே துரத்தப்பட் டோம். என்னை தாக்கியவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.
சசிகலாவின் ஆள்தான் தீபக். பணத்துக்காக சசிகலாவின் குடும் பத்தினர், தீபக் எல்லோரும் சேர்ந்து தான் அத்தையை (ஜெயலலி தாவை) கொன்றுவிட்டனர். சசிகலா குடும்பத்தினருடன் சேர்ந்து தீபக் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சட்டப்படி அவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். கூட்டுச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் தீபக் மீது புகார் அளிப்பேன்.
தீபக் அழைப்பின் பேரில்தான் இங்கு வந்தேன். எனது கவனத்தை திசைதிருப்பி ஏமாற்றி வரவழைத் துள்ளனர். என்னை என்ன வேண்டு மானாலும் அவர்கள் செய்வார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுப்பேன். எனக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அரசை கலைக்க வேண்டும்
போயஸ் தோட்டத்துக்கு வந்த என்னை தாக்குகிறார்கள். இங்கு என்ன அரசாங்கம் நடக்கிறது. இந்த அரசை உடனடியாக கலைக்க வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து பிரதமரை சந்தித்துப் பேசுவேன். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். என்னை கொல்லவும் முயற்சி நடக்கிறது. அதுபோல எனது கணவர் மாதவனை கொல்லவும் சதி செய்கிறார்கள்.
இவ்வாறு தீபா கூறினார்.
பின்னர் தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் தீபா கூறியதாவது:
தீபக்குடன் எந்தவித தொடர் பிலும் இல்லாமல் இருந்தேன். இன்று (நேற்று) காலை திடீரென எனக்கு போன் செய்து, “போயஸ் தோட்டத்தில் பூஜை இருக்கிறது. நீ வரவேண்டும்” என்று கூறி அழைத்தார். நான் அங்கு சென்றபோது வீடு பூட்டி இருந்தது. அப்போது தீபக்கிடம், “சட்டப்படி நீதிமன்ற உத்தரவு பெற்று இங்கு வந்திருக்கலாம். இது சரியான தருணம் இல்லை. வேண்டுமானால் அத்தையின் (ஜெயலலிதா) போட்டோவை சுத்தம் செய்து மாலை போடுகிறேன்’’ என்றேன்.
அங்கிருந்த ஜெயலலிதாவின் படம் அழுக்குப் படிந்து இருந்தது. சசிகலா படமும் அங்கிருந்ததால் அதை அகற்றச் சொன்னேன். அதை ஊடகத்தினர் படம் பிடித்தனர். அப் போது அங்கிருந்த சிலர் ஊடகத் தினரை தாக்கத் தொடங்கினர்.
உயில் உள்ளது
ஜெயலலிதாவின் சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளை தொடங் கியுள்ளேன். போயஸ் தோட்டம் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அந்த வீடு என் பாட்டி வாங்கிய சொத்து என்பதால் அதற்கு ஆவணங்கள் தேவை இல்லை. இருப்பினும், அது தொடர் பான உயில் என்னிடம் உள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளது. சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து தீபக் சதித் திட்டங்களில் ஈடுபட்டார் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப் பேன். தீபக் யார், யாரிடம் பேசினார் என்பதற்கான ஆடியோ ஆதாரங் கள் என்னிடம் உள்ளன. தீபக், சசிகலா தரப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
தமிழகத்தில் யாருக்கும் பாது காப்பு இல்லாத சூழல் உள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனால்தான் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறினேன். பிரத மரை சந்திக்க நேரம் கேட்டுள் ளேன். எப்போது அவர் நேரம் ஒதுக்குகிறாரோ அப்போது சந்திப்பேன். போயஸ் தோட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்க உள்ளேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கொலை மிரட்டல் வந்தது. என்னைக் கொல்ல சதித் திட்டம் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.