தமிழகத்தில் நேற்று 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டியுள்ளது. அதிகபட்ச மாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தின் உள்பகுதி மற்றும் கன்னியாகுமரி கடலோரப் பகுதி இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
வெப்பநிலையை பொருத்த வரை நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட், வேலூரில் 105.44, திருச்சியில் 105.26, மதுரை, பாளையங்கோட்டையில் தலா 104, திருப்பத்தூரில் 103.64, தருமபுரியில் 103.46, சேலத்தில் 102.74, சென்னையில் 100.58, கோவையில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.