தமிழகம்

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓபிஎஸ் அணி ஆதரவு

செய்திப்பிரிவு

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "ராம்நாத் கோவிந்த் ஒரு சிறந்த நிர்வாகி என்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தலித் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்"

ஆட்சிக்குப் பாதகம் வந்தால், ஆட்சியை வீசி எறிந்து கட்சியை வளர்த்தெடுப்போம் என்று அதிமுக எம்.பி. அன்வர் ராஜா கூறியது குறித்த நிருபர்கள் கேள்விக்கு அது அவரது தனிப்பட்ட கருத்து என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஓபிஎஸ்.ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இதுதொடர்பான தகவல் பகிரப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியும் ஆதரவு:

முன்னதாக நேற்று (புதன்கிழமை) பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அதிமுக (அம்மா) கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினரும் பாஜக வேட்பாளருக்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அனைத்து தரப்பினரிடமும் பாஜக வேட்பாளரை ஆதரிக்குமாறு கோரியிருந்தார்.

இதனையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

டிடிவி - கருணாஸ் சந்திப்பு:

இதற்கிடையில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அதிமுக எம்.எல்.ஏ., கருணாஸ் இன்று காலை அடையாறில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அவர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி ஆதரித்திருப்பது குறித்த கேள்விக்கு அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றார்.

SCROLL FOR NEXT