தமிழகம்

திமுகவில் இணையும் மாற்று கட்சி நிர்வாகிகள்: தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. திமுகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட தேமுதிக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.சம்பத்குமார் நேற்று திமுகவில் இணைந்தார்.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சம்பத்குமார் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

ஈரோடு மாநகர மதிமுக செயலாளர் ஆர்.பொன்னுசாமி, ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் சி.பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி கே.குணசேகரன், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டார தமாகா தலைவர் ஆர்.ராஜசேகரன் உள்ளிட்ட 100-க்கும் அதிகமானோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக, தமாகா கூட்டணி அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் வேறு கட்சிகளுக்கு மாறினர்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேமுதிக, மதிமுக, தமாகாவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த ஜூன் 25-ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஜெகன் தனசேகரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் லயன் எஸ்.சங்கர், 29-ம் தேதி சென்னை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் என்.குமாரவடிவேல், 30-ம் தேதி கோவை தெற்கு மாவட்ட தமாகா தலைவர் வி.எம்.மோகன்ராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

தேமுதிக, மதிமுக, தமாகாவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நாள்தோறும் திமுகவில் இணைந்து வருவது அக்கட்சிகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் 17-ம் தேதி சேலத்தில் திமுகவுடன் மக்கள் தேமுதிக இணையும் விழா நடைபெறவுள்ளது. அப்போது தேமுதிக முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT