சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முத்தையா அரங்கில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக் கழக தனி அதிகாரி ஷிவ்தாஸ்மீனா பங்கேற்று குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனையில் கூடுதல் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கையை ஏற்ற கோ ஆப்டெக்ஸ் மேலாளர் சி.ராஜேந்திரன் 30 சதவீத தள்ளுபடிக்கு பதிலாக 35 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்தார்.
விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, கடலூர் மண்டல நிர்வாகக்குழு உறுப்பினர் த.ராமலிங்கம், மண்டல மேலாளர் மா.பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் மண்டல மேலாளர் மா.பார்த்தசாரதி கூறும்போது: அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ ஆப் டெக்ஸில் வட்டியில்லா சுலப கடன் வசதி வழங்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஒப்பந்த விற்பனை அடிப்படையில் சீருடை வழங்கப்படும்.
தங்கமழை திட்டம் வாடிக்ககையாளர்களுக்கு வழங்கப்படும் பரிசு கூப்பனில் சிறப்பு வாசகங்கள் எழுதும் முதல் 10 வாடிக்கையாளர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் வீதம் 40 கிராம் தங்கமும், தலா 2 கிராம் தங்கம் வீதம் 30 நபர்களுக்கு 60 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.100 முதல் ஆயிரம் வரை 9 மாதங்கள் செலுத்தி வந்தால், 10வது தவணையை கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன், அவர்கள் சேமிப்பு தொகையுடன் 58 சதவீதம் அளவிற்கு கூடுதலாக கைத்தறி மற்றும் பட்டு ரக துணிகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.