தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளதை யடுத்து, போயஸ் கார்டனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் 240 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு காவல் உதவி ஆணையர் தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அவரது தோழி சசிகலா அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்னரும் 240 போலீஸாரும் போயஸ் கார்டன் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல் வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித் தனர்.
அதைத் தொடர்ந்து, போலீஸ் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டது. போயஸ் கார்டன் வீட்டின் முன்பு 5 போலீஸார் மட்டுமே நின்றனர். ஆனால் போலீஸாருக்கு பதில் தனியார் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சபாரி உடை அணிந்த தனியார் காவலாளிகள் 70 பேர் பாதுகாப்பு பணியை செய்து வந்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவர் வசித்து வரும் போயஸ் கார்டன் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. நேற்று மாலையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விரைவில் இந்த எண்ணிக்கை 240 ஆக உயரப்போகிறது.