தமிழகம்

ராமதாஸ் தலைமையில் தமிழைக் காப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம்: தி.நகரில் 26-ம் தேதி நடக்கிறது

செய்திப்பிரிவு

தமிழைக் காப்பது குறித்து விவாதிக்க கலந்தாய்வுக் கூட்டம் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தி.நகரில் 26-ம் தேதி நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவில், ஏன் உலக அளவில் கூட, ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி அங்கு வாழும் மக்களின் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த மாநிலத்தின் பெயரும் அழைக்கப்படுவதில்லை. ஆனால், தமிழர்கள் வாழும், தமிழ் மொழி பேசப்படும் நமது மாநிலம் தான் தமிழ்நாடு என பெருமையுடன் அழைக்கப்படுகிறது. ஆனால், அத்தகைய பெருமை கொண்ட தமிழ்நாட்டில் பிறமொழி கலப்பின்றி தமிழ் பேசப்படுவதில்லை என்பது தான் தமிழர்களுக்கெல்லாம் வருத்தம் அளிக்கும் விஷயம்.

தமிழில் பிறமொழி கலப்பு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பிறமொழிச் சொற்கள் பிரிக்க முடியாத அளவுக்கு தமிழுடன் கலந்து விட்டன. தமிழ் எது என்பதைத் தெரியாமலேயே, தமிழ் பேசுவதாக நினைத்து தமிழர்கள் பிறமொழிச் சொற்களை பேசுவதை விட பேரவலம் ஏதுமிருக்க முடியாது.

திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழைக் காப்பது குறித்து விவாதிப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

எனது தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மூத்த தமிழறிஞர்கள் அவ்வை நடராஜன், பொற்கோ, க.ப.அறவாணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பெருமளவில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT