தமிழகம்

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

அரபிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 18-ம் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக சென்னை உட்பட மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் அடைமழை பெய்தது. இதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், அரபிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதுதொடர்பாக மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர்

எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து மறைந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பழநியில் 20 செ.மீ. மழையும், சத்திரப்பட்டியில் 15 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மயிலாடுதுறையில் 12 செ.மீ., திருவிடைமருதூர், குடவாசல், காரைக்கால் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ., ஆய்க்குடி, தலைஞாயிறு, ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்த நிலையில், தற்போது தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தமிழக கடலோரப் பகுதியில் ஈரத்தை ஈர்ப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இவ்வாறு ரமணன் கூறினார்.

அதிக மழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலைத்துறையின் தலைமை இயக்குநர் எல்.எஸ்.ரத்தோர், சென்னை மண்டல துணை தலைமை இயக்குநர் எஸ்.பி.தம்பி ஆகியோர் கூறுகையில், “வடகிழக்கு பருவமழைக்காலத்தில் 44 செ.மீ. அளவுக்கு மழை பெய்வது இயல்பு. தற்போது 14 செ.மீ. மழை பெய்துவிட்டது. இயல்பு அளவை எட்ட இன்னும் 30 செ.மீ. மழை பெய்ய வேண்டும். இந்த ஆண்டு 19 சதவீதம் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT