மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு அரசியல் கட்சியினர் வழங்கிய நிதியுதவி குறித்து அவரது 2-வது மனைவி சேலம் எஸ்பி-யிடம் கொடுத்த புகார் தொடர்பாக 2 மகன்களிடமும் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விசாரணை நடத்தினார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை ஈ மேட்டு காட்டைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அலைபேசி டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்தார்.
இந்நிலையில், சசிபெருமாளின் 2-வது மனைவி மகிழம் நேற்று முன்தினம் தனது மகள் கவியரசியுடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங்கிடம் புகார் மனு அளித்தார். பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அளித்த நிதியுதவியின் பெரும் பகுதியை சசிபெருமாளின் முதல் மனைவியின் மகன்கள் விவேக் மற்றும் நவநீதன் ஆகியோர் வைத்துக்கொண்டதாகவும், தங்களுக்கு கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று காலை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் டிஎஸ்பி சுப்பிரமணியன், சசிபெருமாளின் மகன்கள் விவேக், நவநீதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில் போலீஸாரின் கேள்விகளுக்கு விவேக் மற்றும் நவநீதன் பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து மகிழத்திடம் விசாரணை செய்து, இரு தரப்பு விளக்கங்களின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.