ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 1954-ம் ஆண்டு படித்த மாணவர்களின் வைர விழா சென்னையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1954-ம் ஆண்டில் மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தவரும் தோல் சிகிச்சை நிபுணரும் ஆன டாக்டர் எம்.நடராஜன் விழா மலரை வெளியிட்டு பேசினார். அவர் “இந்திய மருத்துவக் கல்லூரிகளின் கற்றல் முறையை ஆய்வு செய்ய 1954ல் இங்கிலாந்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு வந்தது. ஸ்டான்லி மருத்துவமனையின் தோல் துறையில் படங்களைக் கொண்டு பாடங்களை நான் விளக்குவதை பார்த்தார்கள்.அவ்வாறு கற்று தருவது சிறந்த முறையாக உள்ளது என்று குறிப்பிட்டனர்” என்று பழைய நினைவுகளுக்குள் போனார்.
1954-ம் ஆண்டு மாணவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்டான்லி சந்திரன், “தற்போதைய ஸ்டான்லி மருத்துவமனை முன்பு 1782 ஏழைகளுக்கு கஞ்சி வழங்கிய கஞ்சித் தொட்டி மருத்துவமனையாக இருந்து, பின்பு 1903ஆம் ஆண்டில் ராயபுரம் மருத்துவப் பள்ளியாக மாறி இப்போதைய நிலைக்கு வளர்ந்துள்ளது,” என்றார்.
சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணரான சி.வி.கிருஷ்ணசாமி கூறுகையில், “ஸ்டான்லி மருத்துவமனை தான் சென்னையில் முதன் முதலாக மருத்துவக்கண்காட்சியையும், மருத்துவக் கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளையும் ஆரம்பித்தது,” என்றார்.
வைரவிழா நிகழ்ச்சிக்கான சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக வந்திருந்து பேசிய நகைச்சுவை நடிகர் க்ரேஸி மோகன் “இப்போது கூட்டுக் குடும்பங்கள் குறைவாக இருப்பதே இளம் தலைமுறையினரிடம் மன அழுத்தம் அதிகமாகி வருவதற்கு காரணம். அனைவரும் கூடி மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே நோய்கள் குறைந்து விடும்,” என்றார்.
இசைக்கலைஞரும் மருத்துவருமான சீர்காழி சிவசிதம்பரம், எழுத்தாளர் பாக்யம் ராமசாமி, இதய சிகிச்சை நிபுணர் சி.லக்ஷ்மிகாந்தன், காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறை மருத்துவர் டி.ஜி.ராமமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
1954-ம் ஆண்டு படித்த 111 பேரில் 25 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒலித்துக் கொண்டிருந்த “நெஞ்சம் மறப்பதில்லை”, “அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்தது” போன்ற பாடல்கள் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சந்தித்த பழைய நண்பர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருந்தன.