பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 9 லட்சம் பேரில் 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1,171 பேர் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு இடையே தேவையற்ற போட்டிச்சூழலை உருவாக்கும் ‘ரேங்க்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநில, மாவட்ட வாரியாகவோ, பாடவாரியாகவோ ‘ரேங்க்’ பட்டியல் எதுவும் வெளியிடப்பட வில்லை.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தன. பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 331 பேர். மாணவிகள் 4 லட்சத்து 77 ஆயிரத்து 931 பேர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் தேர்வெழுதினர்.
இந்நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி தேர்வு முடிவுகளையும் தேர்ச்சி நிலை விவரங்களையும் வெளியிட்டார். பொதுத்தேர்வில் ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடுவது கைவிடப்படுவதாக நேற்று முன் தினம் அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கமாக வெளியிடப்படும் மாநில, மாவட்டவாரியான மற்றும் பாடவாரியான ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடப்படவில்லை. இதற்கு பெற்றோர்களும், கல்வியாளர் களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் அதிகாரப் பூர்வமாக வெளியான அடுத்த சில நொடிகளில், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் அவர்கள் ஏற்கெனவே அளித்திருந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. இதுபோன்று எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவு களை தெரிவிப்பது இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
வழக்கமாக பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் டிபிஐ வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்படும். எந்தப் பள்ளி முதலிடம், எத்தனை மாணவர்கள் முதலிடம், முதல் மதிப்பெண் எவ்வளவு என்று ஒரே பரபரப்பான சூழல் நிலவும். ஆனால், இந்த முறை ‘ரேங்க்’ முறை கைவிடப்பட்டதால், டிபிஐ வளாகத்தில் வழக்கமான பரபரப்பு எதுவும் நேற்று காணப்படவில்லை. சிபிஎஸ்இ அமைப்பும் 12-ம் வகுப்பு தேர்வுக்கு ‘ரேங்க்’ பட்டியல் எதையும் வெளியிடுவ தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தேர்வுத்துறை வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி, பிளஸ் 2 தேர்வில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 0.7 சதவீதம் அதிகம். மாணவர்கள் 89.3 சதவீதம், மாணவிகள் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 5.2 சதவீதம் அதிகம். 1,813 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. மொத்தமுள்ள 2,640 அரசுப் பள்ளிகளில் 292 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாவட்ட அளவிலான தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.85 சதவீதம் ஆகும். பிளஸ் 2 தேர்வில் 1,171 மாணவர்கள் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். 1,151 முதல் 1,180 மதிப்பெண் வரை பெற்றவர்களின் எண்ணிக்கை 12,283 ஆகும்.
200-க்கு 200
பொறியியல் படிப்பில் சேர முக்கியமாக கருதப்படும் கணித பாடத்தில் 3,656 பேர், இயற்பியலில் 187 பேர், வேதியியலில் 1,123 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். உயிரியல் பாடத்தில் 221 பேரும், தாவரவியலில் 22 பேரும், விலங்கியலில் 4 பேரும் முழு மதிப்பெண் பெற்றனர். மிக அதிக எண்ணிக்கையாக வணிகவியல் பாடத்தில் 8,301 பேர் 200-க்கு 200 எடுத்துள்ளனர். கணக்குப்பதிவி யலில் 5,597 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள்களில் யாரும் 200-க்கு 200 மதிப்பெண் பெறவில்லை.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
பள்ளி மாணவர்களும், தனித்தேர் வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மே 15 முதல் ஆன்லைனில் (www.dge.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் வரும் 17-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 15-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
கிரேடு எதுவும் இல்லை
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களுக்கு அரசு தேர்வுத்துறை சார்பில் செய்திக் குறிப்பு வழங்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட மதிப்பெண் வாங்கியவர் களின் எண்ணிக்கை விவரம் A, B, C, D, E என்ற வரிசை அடிப்படையில் I வரை கொடுக்கப்பட்டிருந்தது. அதை வைத்து பிளஸ் 2 தேர்வில் ‘கிரேடு’ முறை அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாக தொலைக்காட்சி களில் செய்திகள் வெளியாயின.
இதைத்தொடர்ந்து கிரேடு முறை சரியா, தவறா என்பது தொடர்பான விவாதமும் தொலைக்காட்சிகளில் விறுவிறுப்பாக ஒளிபரப்பானது. அதில், கல்வியாளர்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்து களை தெரிவித்தனர். ஆனால், நிருபர்களுக்கு அளிக்கப்பட்ட செய்திக்குறிப்பில் எந்த இடத் திலும் கிரேடு முறை பற்றி குறிப் பிடப்படவில்லை. இதனால் மா ணவர்களுக்கும், பெற்றோருக்கும் குழப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மதிப்பெண் விவரப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள A, B, C, D, E என்பது கிரேடு அல்ல. மதிப்பெண்கள் எண்ணில் இருப்பதால் அதன் அருகே 1, 2, 3 என்று வரிசை எண்ணை குறிப்பிட்டால் அதில் தவறு ஏற்படலாம். அதை தவிர்ப்பதற் காகவே ஆங்கிலத்தில் A, B, C, D, E என்று குறிப்பிடப்பட்டது. எனவே, அவை கிரேடு அல்ல. வெறும் வரிசை எண்தான்’’ என்றார்.
1200 மதிப்பெண்ணுக்கு 1180 மதிப்பெண் மேல் 1171 பேர் பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு: >| 1180-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1171 பேர் |
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு: >| பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் |
தேர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு: >| தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக உயர்வு |
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் | 92.1% |
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் | 89.3% |
மாணவிகள் தேர்ச்சி விகிதம் | 94.5% |
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு | 0.7% தேர்ச்சி அதிகம் |
தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு:> | பிளஸ் 2 தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி |
பாடவாரியாக சென்டம் விவரம்:
பாடம் | 200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை |
கணிதம் | 3656 |
இயற்பியல் | 187 |
வேதியியல் | 1,123 |
கணினி அறிவியல் | 1647 |
வணிகவியல் | 8301 (அதிக அளவு முழுமதிப்பெண்) |
உயிரியல் | 221 |
தாவரவியல் | 22 |
விலங்கியல் | 4 |
புள்ளியியல் | 68 |
மைக்ரோ பயாலஜி | 5 |
கணக்கு பதிவியல் | 5597 |
வணிக கணக்கு | 2551 |
வரலாறு | 336 |
பொருளாதாரம் | 1717 |
2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. விரிவான செய்திக்கு:>| பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர் |
2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.36 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. விரிவான செய்திக்கு:> | பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர் |
பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் மாணவர்கள் யாரும் 200 மதிப்பெண் பெறவில்லை. வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 8301 பேர் 200 மதிப்பெண் பெற்றனர். விரிவான செய்திக்கு: >| பிளஸ் 2 தேர்வில் மொழிப் பாடங்களில் யாரும் 200 மதிப்பெண் பெறவில்லை |
பின்தங்கும் சென்னை:
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் சென்னை மாவட்டம் பின் தங்கியுள்ளது. மாவட்ட வாரியான தேர்ச்சி விகித பட்டியலில் 16-வது இடத்தில் உள்ளது. அதேபோல் மாவட்ட வாரியான அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் சென்னை பின்தங்கியேவுள்ளது. ஒரு அரசுப் பள்ளிகூட 100% தேர்ச்சி விகிதத்தை எட்டவில்லை.
விரிவான செய்திக்கு:>| சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் எந்த அரசுப் பள்ளியிலும் 100% தேர்ச்சி இல்லை |
முதன்முறை:
1.பிளஸ் 2 தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகளை அனுப்பும் முறை இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2.அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் வெளியானது.
3. முதல்முறையாக, பிளஸ் 2-வுக்கு மே 12-ம் தேதியும் பத்தாம் வகுப்புக்கு மே 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது.
விடைத்தாள் நகல் பெறுவது எப்படி?
விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 15-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இணையதளம் வாயிலாக:
மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து >www.tnresults.nic.in, >www.dge1.tn.nic.in, >www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையங்களிலும், மத்திய, கிளை நூலகங்களிலும் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் 2,427 மையங்களில் தேர்வெழுதினர். தனித் தேர்வர்களாக 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியவர்கள் ஆவர்.