ரயில் மறியல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப் பட்டதைக் கண்டித்தும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் 16-ம் தேதி (நேற்று) முழு அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று காலை பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 5,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை அசோக் பில்லர் அருகே நேற்று போராட்டம் நடந்தது. ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏ.எம்.விக்கிரமராஜா உட்பட சுமார் 200 பேரை கைது செய்து, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ரூ.15 ஆயிரம் கோடி
போராட்டத்தின்போது ஏ.எம்.விக்கிரம ராஜா கூறும்போது, “தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் கடைகளை அடைத்துவிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியிலும் கடை யடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கும் பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.