தமிழகம்

ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்துக்கு அஞ்சமாட்டோம்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா சர்வாதிகாரத்தைச் செய்து வருவதாகவும், அதற்கு தானும் வன்னிய இளைஞர்களும், தனது கட்சியினரும் அஞ்சவில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையான வன்னியர் சங்க மாநில தலைவரும் எம்எல்ஏவுமான குருவை, விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்து வரவேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "தமிழகத்தில் குரு கைது செய்யப்பட்டு 8 மாதம் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார். தமிழகத்தில் அரசு பயங்கரவாதம், வன்னிய இளைஞர்கள் மற்றும் பாமகவினர் மீது கட்டவிழ்க்கப்பட்டு காவல்துறை மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஜெயலலிதா ஏற்க வேண்டும்.

குரு உள்பட 134 பேர் குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதன்பின், குரு நீங்கலாக 133 பேர் விடுவிக்கப்பட்டனர். குருவை கைது செய்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், மீண்டும், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் திருச்சி சிறையில் என்னை அடைத்து 12 நாட்கள் சித்திரவதை செய்தனர்.

அறுவை சிகிச்சை செய்து கொண்ட கையோடு எனக்கு மனவலியும் அதிகரித்தது. பின்னர், 133 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அந்த மனவலியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்றேன். குரு விடுதலையான பின்பு முழுமையான விடுதலை பெற்று மகிழ்ச்சியில் உள்ளேன்.

சர்வாதிகார நிலை என்ன என்று இந்த உலகு அறியும். அதேபோன்ற சர்வாதிகாரத்தைத் தான் ஜெயலலிதா செய்து வருகிறார். இதற்கெல்லாம் நானும் வன்னிய இளைஞர்களும், பாமகவினரும் அஞ்சமாட்டோம்.

இன்னும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி முடிவுக்கு வரும். அப்போது நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT