புதன்கிழமை நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது. பேரவைக்கூட்டத்திலிருந்து காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடப்பாண்டு முதல்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வழக்கமாக ஆளுநர் உரை இடம் பெறும். மக்களவைத் தேர்தல் இடம் பெற்றதால் இம்மரபு இம்முறை கடைபிடிக்கப்படவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. வரும் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களுக்கு ரூ. 2,550 கோடி கூடுதல் செலவுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
சட்டப்பேரவை தொடங்கியவுடன், எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் பேசியபோது, "ஜனவரியில் கண்டிப்பாகப் பேரவை கூட்டப்படும் என பேரவைத்தலைவர் உறுதி தந்தார். ஆனால், மார்ச்சில்தான் பேரவை கூட்டம் நடக்கிறது. பேசவும் வாய்ப்பு தருவதில்லை. அதனால் வெளிநடப்பு செய்கிறோம்" என்றார். இதையடுத்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது அதிமுக சார்பில் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் எழுந்து, "ஆளுநர் உரை இடம்பெறவில்லை. முழு பட்ஜெட் தாக்கல் இல்லாததால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன" என்று குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார். அவருடன் மற்றொரு எம்எல்ஏ பெரியசாமியும் வெளியே சென்றார். ஆனால், மாநிலச் செயலர் அன்பழகன் உட்பட 3 எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்தனர். வெளிநடப்பு செய்யவில்லை.
அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, "தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆளுநர் உரை இடம் பெறவில்லை. அரசு திட்டங்களுக்குத் தொகை ஒதுக்கவே இக்கூட்டம் நடைபெறுகிறது. இது வழக்கமானதுதான். தேர்தலுக்குப் பிறகு பட்ஜெட் கூட்டம் நடக்கும்" என்றார்.
இதையடுத்து தலைமைச் செயலரை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து, திமுக, அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர், "தலைமைச் செயலரை மாற்ற அவசியமில்லை என உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளோம்" என்றார்.
இந்நிலையில் கூடுதல் செலவின மதிப்பீட்டுத்தொகைக்கான ஒப்புதல் பெறப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடத்த அனுமதி தராததால் அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சுமார் 35 நிமிடங்களில் பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.