ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கி போட்டிகள் நடைபெற்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நெடுவாசல், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுக்க மத்திய அரசு கடந்த 15ம் தேதி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
இத்திட்டம் வந்தால் நெடுவாசல் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெடுவாசல் பகுதி மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்த மாணவர்களும், இளைஞர்களும் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்து புதுச்சேரி பகுதியில் வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.
வாட்ஸ்அப்பில் பரவும் தகவலில் கூறி இருப்பதாவது: ‘‘2-ம் தேதி புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த அதே இடத்தில் மீத்தேனுக்கு எதிரான போராட்டம், நமது நெடுவாசல் நண்பர்களுக்கு தைரியம் அளிக்கும் இப்போராட்டம், அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒத்துழைப்பு தாருங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.