தமிழகம்

தமிழ் கணினி உருவாக்க பாடுபட வேண்டும்: துணைவேந்தர் பொன்னவைக்கோ வேண்டுகோள்

செய்திப்பிரிவு

முழுவதும் தமிழை பயன்படுத்தும் வகையிலான கணினியை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என பாரத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ உலகத் தமிழ் இணையமாநாடு நிறைவு விழாவில் பேசினார்.

அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்பமன்றம் (உத்தமம்) காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 15-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கடந்த மூன்று நாட்களாக காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் நடை பெற்றது.

ஆய்வரங்கம், கண்காட்சி அரங்கம், மக்கள் அரங்கம் என மூன்று பிரிவுகளாக மாநாடு நடைபெற்றது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு கான்பூர் ஐஐடி முன்னாள் தலைவர் மு. அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். காந்திகிராம பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் முன்னிலை வகித்தார். உத்தமம் துணைத் தலைவர் சுகந்தி வரவேற்றார்.

பாரத் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மு. பொன்னவைக்கோ பேசியதாவது: உத்தமம் முதலில் பெயர் பெற்றது இலங்கையில், நிறுவப் பெற்றது சிங்கப்பூரில். எங்கும் கணினித் தமிழ், எதிலும் கணினித் தமிழ் என கணினியில் எந்தெந்த விதத்தில் தமிழை புகுத்தவேண்டுமோ அனைத்திலும் தமிழை புகுத்த வேண்டும் என்பதில் உத்தமம் ஆர்வம் காட்டவேண்டும். கணிப் பொறியிலும், இணையத்திலும் தமிழை எளிமையாக்க உத்தமம் பாடுபட வேண்டும்.

ஜப்பான், கொரியா. சீனா ஆகிய நாடுகளில் முழுமையாக கணினியில் அந்தந்த நாட்டின் மொழிகளே உள்ளன. அந்த நாட்டு மொழியில் அலைபேசிகள் உள்ளன. அவர்களின் மொழிக்கே கணினி, அலைபேசி உள்ள நிலையில் மூத்தமொழியான தமிழ் மொழிக்கு ஏன் முழுமையான கணினி கொண்டுவர முடியாது. முழுக்க முழுக்க தமிழ் எழுத்து பயன்படுத்தக் கூடிய கணினியை கொண்டு வரவேண்டும். முழுமை யான தமிழ் கணினி உருவாக்கு பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். 16-வது மாநாட்டிற்குள் தமிழுக்கு முழுமையான கணிப்பொறி உருவாக்கிட வேண்டும். நமக்கு வேண்டியதெல்லாம் முயற்சிதான். முடியாதது என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் உத்தமம் கிளையை துவக்கவேண்டும், என்றார்.

உத்தமம் செயற்குழு உறுப் பினர் துரை.மணிகண்டன் நன்றி கூறினார்.

முன்னதாக நடந்த உத்தமம் செயற்குழு கூட்டத்தில் 16-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டை கனடாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்புகளை கனடா தமிழர் செந்தூரன் பெற்றுக்கொண்டார்.

SCROLL FOR NEXT