தமிழகம்

1.5 லட்சம் பேருக்கு இலவச ஆடுகள்

செய்திப்பிரிவு

இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்குவது குறித்து பட்ஜெட்டில் கூறியிருப் பதாவது:

வரும் நிதியாண்டில் ரூ.43.65 கோடியில் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்படும். மேலும் 1.5 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வழங்கப்படும். இதற்காக ரூ.198.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 100 கால்நடை துணை மையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும்.

கால்நடை தீவன உற்பத்திக்கு ரூ.25 கோடியும், கோழி வளர்ப்புத் தொழிலுக்கு ரூ.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை காப்பீட்டுத் திட்டம் ரூ.12 கோடியில் விரிவுபடுத்தப்படும். பால் பண்ணைகளின் திறனை உயர்த்த ரூ.25 கோடியும், பால் உற்பத்தித் துறைக்கு ரூ.70.67 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

35 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு தமிழக அரசு எப்போதும் உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. பட்டதாரி பெண்களுக்கு கூடுதல் நிதி உதவி அளிக்கும் வகையில் திருமண உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வரும் நிதி ஆண்டில், இந்த திட்டங்களுக்கு ரூ.751 கோடி ஒதுக்கப்படும்.

இதில், ரூ.204 கோடி திருமாங்கல்யத்துக்கான தங்க நாணயங்கள் வாங்கவும், ரூ.547 கோடி பண உதவிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படும்.

கடந்த 3 ஆண்டுகளில் 95 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப் பட்டுள்ளன.

வரும் ஆண்டில் மேலும் 35 லட்சம் குடும்பங்களுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT