தமிழகம்

செயல்மணியை சேவகனாகப் பெறவே என்ன தவம் செய்தேன்?- இரங்கல் செய்தியில் கருணாநிதி உருக்கம்

ஹெச்.ஷேக் மைதீன்

திமுக தலைவர் கருணாநிதியின் தனி உதவியாளராகவும், அவருக்கு செட்டிநாடு வகை சமையல் சமைத்து தந்தவருமான செயல்மணி, உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவருக்கு வயது 74.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக தலைவர் கருணாநிதியிடம் தனி உதவியாளராக சேர்ந்தவர் கரு.செயல்மணி. இவர் சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை, கருணாநிதி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் செயல்மணி காலமானார். அவரது உடல் சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

செயல்மணிக்கு செல்வமணி என்ற மனைவியும் கலைவாணன், தம்பிதுரை என்ற மகன்களும் அஞ்சுகம் என்ற மகளும் உள்ளனர். இவரது மருமகன் கோவலன், செய்தித் தொடர்புத் துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார்.

கருணாநிதியின் வீட்டில் செயல் மணி பணியாற்றியது குறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி சிற்றூரைச் சேர்ந்த செயல் மணி, திமுகவில் இணைந்து பணி யாற்றிவந்தார். 1963-ல் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் மூலம் கருணாநிதியின் இல்லத்தில் உதவி யாளராக சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 23. கோபாலபுரம் இல்லத்தில் சில மாதங்கள் வரை, கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மையாருக்கு வெற்றிலை, பாக்கு வாங்கி வந்து கொடுப்பதுதான் செயல்மணியின் பணியாக இருந்தது. அஞ்சுகம் அம்மையார் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் பிரத்யேக உதவி யாளராகவும் சமையல்காரராகவும் பணிபுரிந்துள்ளார்.

செயல்மணி பணியில் சேர்ந்தபோது அழகிரிக்கு 12 வயது, ஸ்டாலினுக்கு 10 வயது இருக்கும். அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வது, மதிய உணவு கொண்டு செல்வது போன்ற பணியையும் செயல்மணி செய்துவந்தார்.

ஒருமுறை கருணாநிதி வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வந்த போது, அவரைப் பார்த்து செயல்மணி ஏதோ பாவனை காட்டினார். மீண்டும் மாடிக்கு சென்ற கருணாநிதி, சில நிமிடங்கள் கழித்து திரும்பியிருக்கிறார். முகச் சவரம் செய்ததில் மீசை சரியாக இல்லை என்பதை செயல்மணி சுட்டிக் காட்டியதும், அதை கருணாநிதி மீண்டும் சரி செய்தார் என்பதும் பிறகுதான் தெரிந்தது.

வயதாகிவிட்டதால் 2004-ம் ஆண்டுக்கு பிறகு செயல்மணியின் பணிகள் குறைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக தினமும் கோபால புரம் இல்லத்துக்கு காலையில் வருவதும், கருணாநிதி வெளியே செல்லும்வரை காத்திருந்துவிட்டு வீடு திரும்புவதுமாக இருந்துள் ளார். திமுக சார்பில் சென்னையில் நடக்கும் முக்கிய போராட்டங்களில் முதல் ஆளாக கலந்துகொள் வார். இதற்காக கருணாநிதியே பலமுறை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இவ்வாறு திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

செயல்மணியின் மறைவு குறித்து கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘செயல்மணியை சேவகனாகப் பெறவே என்ன தவம் செய்தேன்?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT