தமிழகம்

குண்டாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை: தென்மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

காவிரி- குண்டாறு திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக தென் தமிழக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக் குடி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வறட்சியால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் கடலில் கலக்கும் காவிரி உபரி நீரை தென்மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்ல வசதியாக காவிரியையும் குண்டாறையும் இணைக்கும் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் வரை சுமார் 180 கி.மீ தொலைவுக்கு கால்வாய் அமைக்க நடப்பாண்டு ரூ.7,400 கோடிக்கு பொதுப்பணித் துறையின் சார்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாதது தென் மாவட்ட மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி மற்றும் குண்டாறு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிசா.மாரிமுத்து ஆகியோர் கூறியதாவது: டெல்டா பகுதிகளில் நீரில் பயிர்கள் மூழ்கி பாதிக்கப் படுவதைத் தடுக்கவும், வறட்சியான புதுக்கோட்டை, சிவகங்கை, ராம நாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பயன்பெறவுமே காவிரி- குண்டாறு திட்டம் உருவாக்கப் பட்டது.

இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய நீர்வளத் துறை அமைச் சரைச் சந்தித்து வலியுறுத்தியும் கூட இத்திட்டத்துக்காக மத்திய அரசு எதையும் செய்யவில்லை. தமிழக எம்பி-க்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தமிழகமெங்கும் விவசாயத்தின் அவலநிலையை மத்தியக் குழு பார்த்துச் சென்றபிறகும்கூட மத்திய அரசு, இத்திட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது என்றனர்.

          
SCROLL FOR NEXT