தமிழகம்

60 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது: 14 பேர் உயிர் தப்பினர்

செய்திப்பிரிவு

கீழ்ப்பாக்கத்தில் 60 ஆண்டு பழமையான 2 மாடி கட்டிடம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலை யில் 60 ஆண்டு பழமையான 2 மாடி கட்டிடம் இருந்தது. கட்டிடத்தின் உரிமையாளரும், பைனான்ஸ் தொழில் செய்து வருபவருமான உத்தம்சந்த் என்பவர் கீழ்தளத்தில் மனைவி சந்திரா, மகன் மேவுல், மகள் மோனிகா, உறவினர் கமலாபாய் ஆகியோருடன் வசித்து வந்தார். கீழ்தளத்தில் 4 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. முதல் மற்றும் 2 வது மாடியில் 15 ஆண்டுக்கு முன்பு திருமண மண்டபம் செயல்பட்டு வந்துள்ளது. சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் ஒழுகியதால், அதனை உத்தம்சந்த் காலியாகவே வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணி அளவில் 2 வது மாடியின் மேல் தளம் இடிந்து, முதல் மாடியின் தளத்தில் விழுந்தது. அப்போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டு வெளியே வந்த உத்தம்சந்த் கட்டிடம் இடிந்து விழுவதை பார்த்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்களை எழுப்பிக் கொண்டு வெளியே ஓடிவந்தார். அதன்பின் முதல் தளமும் இடிந்து விழத்தொடங்கியது. சிறிது நேரத் தில் இரண்டு மாடி கட்டிட இடிபாடு களும் கீழ்தளத்தில் விழுந்தன.

இடிந்த கட்டிடத்தின் வலது பக்கத்தில் சுரேஷ் என்பவரின் வீடு இருந்தது. கட்டிட இடிபாடுகள் சரிந்து, அவரது வீட்டிலும் விழத் தொடங்கியது. சத்தம் கேட்டு எழுந்த சுரேஷ் மனைவி மற்றும் மகன்களை எழுப்பிக் கொண்டு வெளியே ஓடி வந்தார். இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிடத்தில் தங்கியிருந்த உரிமை யாளர் உத்தம்சந்த் குடும்பத்தினர் மற்றும் அருகில் வசித்த சுரேஷ் குடும்பத்தினர் என 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து 5-க்கும் மேற்பட்ட வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் யாரா வது சிக்கியுள்ளார்களா? என்று பார்த்தனர். யாரும் இல்லாததால், இடிபாடுகளை அகற்றும் பணி யில் தீயணைப்பு வீரர்கள் ஈடு பட்டனர். கட்டிடம் இடிந்து விழுந் ததில் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த கார், மீன்பாடி வண்டி ஆகியவை சேதமடைந்தன. கட்டிட இடிபாடு களை அகற்றும் பணிகளை அமைச்சர் கோகுல இந்திரா நள்ளிரவில் வந்து பார்வையிட்டார். கட்டிடத்தின் உரிமையாளர் உத்தம்சந்த் கூறுகையில், ‘‘இந்த கட்டிடம் என்னுடைய தாத்தா கட்டியது. குடும்ப பிரச்சினை காரணமாக, கட்டிடத்தை இடித்து கட்ட முடியாமல் இருந்தது’’ என்றார்.

பக்கத்து வீட்டில் வசித்த சுரேஷ் கூறுகையில், ‘‘முதலில் இடி விழுந்தது போல் சத்தம் கேட்டது. இரண்டாவது முறை நில அதிர்வு போல் உணர்வு ஏற்பட்டது. உடனே வெளியே வந்து பார்த்தேன். அப்போதுதான் கட்டிடம் இடிந்து விழுந்து கொண்டிருந்தது. இதையடுத்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை எழுப்பி வெளியே அழைத்து வந்தேன். நாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்’’ என்றார்

SCROLL FOR NEXT