கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கங்கைக் கரையில் திருவள்ளு வர் சிலை புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பது தமிழர்கள் நெஞ்சில் வெட்டுக்கத்தியை வைத்தது போல் வேதனையைத் தருகிறது. இது திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமல்ல, இந்திய தேசியத்துக்கே நேர்ந்த அவமானமாகும்.
திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் உரியவரோ, பகைவரோ அல்லர். அவரின் சாதி, சமூகம் எதற்கும் இதுவரை ஆதாரமில்லை. வள்ளுவரின் சிலை திறப்பு விழாவில் உத்தரகாண்ட், மேகாலயா மாநில ஆளுநர்கள் கலந்து கொண்ட பிறகும், இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் அரசைவிட அந்த மாநிலங்களில் மதவாத சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதையே காட்டுகிறது.
தலைகீழாய்ப் பிடித்தாலும் நெருப்பு மேல்நோக்கித்தான் எரியும். கவிழ்க்கப்பட்டாலும் திருவள்ளுவரின் பெருமை நிமிர்ந்தே நிலைக்கும். தமிழ் உணர்வாளர்கள் கிளர்ச்சிக்குத் தள்ளப்படும் முன் திருவள்ளுவர் மீட்கப்படுவார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் வைரமுத்து கூறியுள்ளார்.