கட்டாயக் கல்விச் சட்டத்தைப் போன்று அனைவருக்கும் கட்டாய மருத்துவ வசதி சட்டத்தை கொண்டு வருவது அவசியம் என `தி இந்து’ குழுமத்தின் சேர்மன் என்.ராம் தெரிவித்தார்.
கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 25வது ஆண்டு விழாவையொட்டி "வயிறு" - தேசிய ஜீரண மண்டல கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. அப்போது ஜெம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சி.பழனிவேலுவின் 25 ஆண்டு கால சாதனையைப் பாராட்டி உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய கேரள ஆளுநருமான பி.சதாசிவம் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் `தி இந்து’ குழுமத்தின் சேர்மன் என்.ராம் பேசியதாவது: மனிதனுக்கு சுகாதாரம் முக்கிய தேவைகளில் ஒன்று. அதனால்தான் மற்ற தொழில்களைப் போல் இல்லாமல் மருத்துவம் உன்னதமான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மருத்துவ சிகிச்சைகளும், அதற்கான வசதிகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதிநவீன சிகிச்சை முறைகள் நல்ல பலனை அளித்து வருகின்றன.
இருந்தபோதும், நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைப்பதில் தடங்கல்கள் உள்ளன. மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பது சாதாரண மக்களுக்கு அசாதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மை.
இதற்கு காரணமாக, மருத்துவத் துறையில் முதலீடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. நன்கொடை வழங்கினால்தான் மருத்துவக் கல்வி கிடைக்கும் நிலை இருக்கிறது. இதுதான் மருத்துவச் சிகிச்சை கட்டண உயர்வுக்கு காரணமாக உள்ளது. மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களிடம் நன்கொடை வாங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருந்தபோதும், அந்த உத்தரவு மீறப்படுகிறது.
அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். அனைவருக்கும் கட்டாய கல்வியைப் போன்று அனைவருக்கும் கட்டாய மருத்துவ வசதி சட்டம் கொண்டு வருவது அவசியம். அனைவருக்கும் மருத்துவ வசதி என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதை, அரசுகளும், சமூகமும் உறுதிப்படுத்திடவேண்டும். இது சவாலான காரியம் என்றாலும் கொண்டு வருவது அவசியம். இவ்வாறு ‘தி இந்து’ என்.ராம் பேசினார்.
கேரள ஆளுநர்
கேரள ஆளுநர் சதாசிவம் பேசும்போது, நவீன மருத்துவக் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. மருத்துவ துறையின் வளர்ச்சியால் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. இருந்தபோதும், புதிய நோய்களின் வரவு, பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. புதிய நோய்களை தடுக்க நமது விஞ்ஞானிகள் அதற்கான கூறுகளை ஆய்வு செய்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் சிபிஐ இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். விழாவில் தன்னலமற்ற சமூக சேவைக்காக புலவர் சிற்பி.பாலசுப்பிரமணியம், கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியரும், இலவச ஐ.ஏ.எஸ். பயிற்றுநருமான பி.கனகராஜ், அரசுப் பேருந்து நடத்துநர் யோகநாதன், தோழர் அறக்கட்டளை தலைவர் பி.சாந்தகுமார், கிருஷ்ணசுவாமி நாயுடு அறக்கட்டளை நிர்வாகி செல்வராஜ், ஸ்பாட் ப்ளட் டோனர்ஸ் கிளப் நிர்வாகி அப்பாஸ் ஆகியோருக்கு சமூக சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. கோவை வருமான வரி ஆணையர் கே.ராமலிங்கம், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.