தமிழகம்

டிடிவி.தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் உட்பட 82 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு: 45 பேரின் மனுக்கள் நிராகரிப்பு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களான டிடிவி. தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் உள்ளிட்ட 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 45 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 14 பெண்கள், 113 ஆண்களிடமிருந்து மொத்தம் 127 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் பிரகாஷ், காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ஷிவ்குமார் வர்மா ஆகியோர், வேட்புமனு பரிசீலனை பணிகளை மேற்பார்வையிட்டனர்.

அங்கு திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி. தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன், உள்ளிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பரிசீலனையில் டிடிவி. தினகரன், மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், சுயேச்சை வேட்பாளர் ஜெ.தீபா உள்ளிட்ட 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்களை முறையாக பூர்த்தி செய்யாதது, வைப்புத் தொகையான ரூ.10 ஆயிரத்தை செலுத்தாதது உள்ளிட்ட பல காரணங்களுக்காக சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர், மாற்று வேட்பாளர் உள்பட 45 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுயேச்சைகள் சார்பில் மொத்தம் 84 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என பலர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திமுக எதிர்ப்பு

‘டிடிவி.தினகரன், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தண்டனை பெற்றவர். ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தண்டனை சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். தான் இந்தியர் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதனால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் நேற்று மனு அளித்திருந்தார். அந்த மனு மீது பிரவீன் நாயர் விசாரணை நடத்தினார்.

மனு ஏற்பு

அதனைத் தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சென்னை உயர் நீதிமன்றம், தினகரன் மீதான சிவில் அபராதத்தைதான் உறுதி செய்துள்ளது. குற்றவாளி என உறுதி செய்யவில்லை. மேலும் அவர் வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதனால் தினகரனின் வேட்புமனு ஏற்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உறவினரும், சுயேச்சை வேட்பாளருமான ஜெ.தீபாவின் வேட்புமனுவில், சில விவரங்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை எனவும், அதனால் அவரது மனு நிராகரிக்கபட வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

27-ல் இறுதிப் பட்டியல்

வேட்புமனு பரீசீலனையில் ஏற்கப்பட்ட மனுக்களின் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற மார்ச் 27-ம் தேதி கடைசி நாள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே, வேட்பாளர்களின் சின்னங்கள் இறுதி செய்யப்படும். அன்றே வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 50 அமைவிடங்களில், 255 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.

SCROLL FOR NEXT