பாஜக ஆட்சி என்றுமே சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடலுடன் சேலம் வந்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.
டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் சுதிர்குமார் குப்தா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துக்குழுவினர் முத்துக்கிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அதற்குப் பிறகு முத்துக்கிருஷ்ணன் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக அவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.
முத்துக்கிருஷ்ணன் தந்தை, உறவினர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் பயணித்தனர்.
சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ''முத்துக்கிருஷ்ணனின் பெற்றோருடன் இரண்டு நாட்கள் உடனிருந்து, எனது சொந்த தம்பியைப் போல அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறேன்.
ஹோலி பண்டிகையின்போது, ஜேஎன்யூவில் உணவு வழங்கப்பட மாட்டாது என்பதால், முத்துக்கிருஷ்ணன் திங்கள் அன்று வெளிநாட்டு நண்பரின் அறையில் மதிய உணவு உட்கொண்டுள்ளார். அங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை.
முத்துக்கிருஷ்ணனின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏன் நானும் கூட வலியுறுத்துகிறேன். விசாரணை உரிய முறையில் நடக்க முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சாதிய வன்கொடுமை பாஜக ஆட்சியில்தான் நடைபெறுகிறது என்று சிலர் கூறிவருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
முத்துக்கிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்த, அவரின் நண்பர்கள் முயன்றபோது அனுமதி அளிக்க டெல்லி காவல்துறை மறுத்துவிட்டது. நாங்கள்தான் காவல்துறையிடம் அனுமதி பெற்றுக்கொடுத்தோம்.
பாஜக ஆட்சி என்றுமே சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும்'' என்றார்.
பொன்.ராதாகிருஷ்ணனின் மீது காலணி வீச்சு நடக்க முயன்றதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதா என்று கேட்டதற்கு, ''இங்கு அரசியல் பேச விரும்பவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.