தமிழகம்

தொடர்ச்சியாக செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிக்கினர்

செய்திப்பிரிவு

மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் வடசென்னை பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

சென்னை மயிலாப்பூர், ராயப் பேட்டை, ஐஸ் அவுஸ் பகுதியில் கடந்த 31-ம் தேதி 5 பெண்களிடம் செயின்களை பறித்து சென்று விட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் இந்த 5 சம்பவத் திலும் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வரும் ஒரு நபர் செயினை பறித்து கொண்டு தப்பி செல்லும் காட்சிகள், அருகே ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகளை போலீஸார் எடுத்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் காவல் நிலைய போலீஸ்காரர் மணிகண்டன், தண்டையார் பேட்டை நேதாஜி நகரில் ரோந்து செல்லும்போது, செயின் பறிப்பு வீடியோ காட்சியில் கொள்ளையன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் போலவே ஒன்று சாலையில் நின்றது. உடனே மணிகண்டன் மற்றும் போலீஸார் அந்த மோட்டார் சைக்கிள் யாருடையது என்பதை விசாரித்துவிட்டு, அந்த நபரின் வீட்டுக்கு சென்றனர். அங்கே 3 இளைஞர்கள் இருக்க, அவர்கள் போலீஸை பார்த்ததும் தப்பி ஓட முயன்றுள்ளனர். உடனே போலீஸார் சுற்றி வளைத்து 3 பேரையும் பிடித்து விசாரிக்க, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிந்தது. 3 பேரையும் மயிலாப்பூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மயிலாப்பூர் போலீஸார் நடத் திய விசாரணையில், ராயப்பேட் டையை சேர்ந்த உதயநிதி(23), தண்டையார்பேட்டையை சேர்ந்த பரமசிவம்(26), மணி(25) என்பது தெரிந்தது. இதில் உதயநிதி மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே 2 திருட்டு வழக்குகள் உள்ளன. மயிலாப்பூரில் தொடர்ச்சியாக செயின் பறிப்பில் ஈடுபட்டதும் இவர்தான் என்பது தெரிந்தது. அப்பு, சென்டா என பல பெயர்களில் உதயநிதியை அழைத்துள்ளனர். இடத்துக்கு ஏற்ற மாதிரி அவரும் பெயரை மாற்றி மாற்றி கூறியுள்ளார்.

இந்த 3 பேரும் சேர்ந்து எங்கெல்லாம் செயின் பறிப்பில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து 11 பவுன் நகை, ரூ.42 ஆயிரம் ரொக்கம் மற்றும் செயின் பறிப்புக்கு அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதானவர்கள்

SCROLL FOR NEXT