தமிழகம்

தமிழக சட்ட ஆணைய தலைவராக நீதிபதி சி.நாகப்பன் நியமனம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சட்ட ஆணையத் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்ட ஆணையம் கடந்த 1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2014-ல் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், திருத்தி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ளார்.

நீதிபதி சி.நாகப்பன் கரூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 2000-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியானார். 2002-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013 பிப்ரவரியில் ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். அதே ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2016 அக்டோபரில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்ட ஆணையத் தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். 1994-ல் வகுக்கப்பட்ட விதிகளின் படி ஆணையம் செயல்படும். சட்ட ஆணையத் தலைவருக்கான விதிகள், கட்டுப்பாடுகள், மற்ற உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கட்டிடத்தின் 5-வது தளத்தில் சட்ட ஆணைய அலுவலகம் செயல் படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT